இந்தியாவில் பெரும்பாலும் கணவன், மனைவி சம்பாதிக்கும் இந்த காலத்தில் குழந்தைகள் ஏதும் கேட்டால் பெற்றோர்கள் அதை மறுப்பதே இல்லை. காரணம் நாம் குழந்தையாக இருந்த போது கிடைக்காதது, நம் குழந்தைகளுக்காவது கிடைக்கட்டுமே என்ற எண்ணம்தான். இதனால் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உலகம் முழுதும் பெருகி விட்டன, ஏன் இந்தியாவிலும் தான். உலகளவில் மக்கள் தொகையில் முன்னணி வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று மற்றும் 30 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயம் அதிகம் உள்ள நாடுகளில் நமது இந்தியாவும் அடங்கும் . இதனால் குழந்தைகளின் பொருட்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகம்.
கடந்த பத்து வருடங்களில் குழந்தைகளை மையமாக வைத்தே பல ஸ்டார்ட் அப் கள் வந்திருக்கின்றன. இதற்கு ஒரு சிறிய உதாரணம் 2020ம் ஆண்டு குழந்தைகள் அணியும் டயப்பர்-களின் மார்க்கெட் மதிப்பு மட்டும் என்னவாக இருக்கும் தெரியுமா? சுமார் 37,000 கோடி ரூபாய்கள். இது தவிர மேலும் பல குழந்தைகளின் பொருட்களை அடுக்கிக் கொண்டே போகலாம், உதாரணத்திற்கு உடைகள், விளையாட்டு பொருட்கள், பரிசுப் பொருட்கள், தொட்டில்கள், செருப்புகள், பீடிங் பாட்டில்கள், பேஷன் பொருட்கள், புத்தகங்கள்.
குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கும் போது, தி பெஸ்டை வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருப்பதால், கடைகளுக்குச் செல்லும்போது விலைகளை பற்றி அதிகம் நாம் கவலைப்படுவதில்லை. இதனால் குழந்தைகளுக்கான பொருட்களை விற்கும் சிறிய, பெரிய கடைகள் இந்தியாவில் பெருகிக் கொண்டே செல்கின்றது.
இதை மையமாக வைத்துத் துவங்கப்பட்டது தான் “பர்ஸ்ட் கிரை” (First Cry). இந்த கம்பெனி அபரிமிதமாக வளர்ச்சியடைந்து இப்போது இந்தியாவில் பல ஊர்களில் கடை பரப்பியுள்ளது. இவர்கள் தற்போது தங்களிடம் குழந்தைகளின் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு எடுத்துச் சென்று வீடுகளில் கொடுத்து வர ஒரு கூரியர் கம்பெனியும், குழந்தைகளுக்கான ஒரு ப்ளே ஸ்கூல் செயினும் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த கம்பெனியின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 7000 கோடி ரூபாயைத் தாண்டவுள்ளது. இதனால் இந்த கம்பெனி விரைவில் ஒரு யுனிகார்ன் என்ற அந்தஸ்தைப் பெறும் வாய்ப்புகள் அதிகம்.
ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஒரு பில்லியன் டாலர் மதிப்பை (அதாவது சுமார் 7000 கோடி ரூபாய்) அடைந்தால் அது யுனிகார்ன் கம்பெனி என அழைக்கப்படும். இந்தியாவில் அளவில் யுனிகார்ன் கம்பெனிகள் கூடி வருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். 30 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இந்த அந்தஸ்தை அடைந்துள்ளது. என்ன யோசிக்கிறீர்கள், குழந்தைகள் விரும்பும் பொருட்களை மையமாக வைத்து என்னென்ன செய்யலாம் என்று ரூம் போட்டு யோசிக்க ஆரம்பியுங்கள். அது உங்களுக்கு வருமானங்களைப் பெற்றுத் தரும்.