2000 வருஷத்தில் இந்தியாவில் நுழைந்த ஈ-காமர்ஸ் துறை இன்றைய தினத்தில் கொடி கட்டிப் பறக்கிறது. காரணம் மொபைல் உபயோகம், இந்தியாவின் மக்கள் தொகை. 2000 ம் வருஷத்தில் பாசி.காம் (baazee.com) என்ற வாங்குபவர், விற்பவர் இணையதளம் ஆரம்பிக்கப்பட்ட போது பலர் இணையம் மூலமாக யாராவது பொருட்கள் வாங்குவார்களா? என்ற பெரிய கேள்வியை எழுப்பினார்கள். பின்னர் 2004ம் ஆண்டு இந்த இணையதளத்தை ஈபே நிறுவனம் 55 பில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் ரூபாய் 385 கோடி) கொடுத்து வாங்கி தன்னகப்படுத்திக் கொண்டது.
2007ம் வருடம் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்த இரண்டு இளைஞர்கள் சச்சின் பன்சால், சஞ்சய் பன்சால் அவர்களுடைய அமேசான் அனுபவத்தை வைத்து பிளிப்கார்ட் நிறுவனத்தை ஒரு கார் ஷெட்டில் ஆரம்பித்தார்கள். அன்றைய தினத்தில் புத்தகங்களை மட்டும் ஆன்லைனில் விற்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனியாகும். ஆனால் இன்றைய தினத்தில் பிளிப்கார்ட் மூலம் விற்காத பொருட்களே இல்லை என்ற அளவிற்கு வந்து நிற்கிறது. கடந்த வருடம் பிளிப்கார்ட் தனது நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனத்திற்கு 16 பில்லியன் டாலருக்கு (இன்றைய மதிப்பில் 102,000 கோடி ரூபாய்களுக்கு) விற்று இருக்கிறது.
2007க்கு பிறகு பல வெற்றிகரமான டிராவல்ஸ், கல்யாண புரோகர், வாங்குபவர் விற்பவர் இணையதளங்கள் ஆகியவை வந்து இன்றைய தினமும் அவை சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஐஆர்சிடிசி, மேக்மை டிரிப், யாத்ரா, கிளியர்டிரிப், ஓயோ, பாலிசி பஜார், பாங்க் பஜார், ரெண்ட்மோஜோ போன்ற நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான இணையதளங்கள் வந்தன.
இந்த ஈ காமர்ஸ் துறை 2021ம் வருடம் 5.88 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகும் துறையாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ரீடெய்ல் துறையில் வர்த்தகம் 84 லட்சம் கோடிகளுக்கு நடக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த துறையின் அபரிதமான வளர்ச்சியை மனதில் கொண்டு ரிலையன்ஸ் நிறுவனமும், பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக ஈகாமர்ஸ் துறையில் பெரிய அளவில் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
கோடிக்கணக்கானவர்களின் கையில் மொபைல் இருப்பதால், உங்களிடம் நல்ல யோசனைகள் இருந்தால் பல லட்சங்களுக்கு ஏன் கோடிகளுக்கு நீங்களும் அதிபராகலாம்.