இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பிலிருந்தவர்களில் பெரும்பாலோனார் அவர்களது பதவி காலம் முடிந்த பிறகு புத்தகம் எழுதுவதைக் கடமையாக அல்லது வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. இதற்கு உதாரணமாக ஒய் வி ரெட்டி, சுப்பாராவ், ரகுராம் ராஜன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இப்போது அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் உர்ஜித் பட்டேல். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவி காலத்துக்கு முன்பே அப்பதவியிலிருந்து விலகியது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம் “ஓவர்டிராஃப்ட் – சேவிங் தி இண்டியன் சேவர் (Overdraft – Saving the Indian Saver). இந்தப் புத்தகத்தை அவர் `இந்திய சேமிப்பாளர்களுக்கு’ சமர்ப்பித்திருக்கிறார். 

இன்றைக்கு வங்கிகள் எதிர்கொள்ளும் பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்கு `9R உத்திகளைப் பரிந்துரைக்கிறார். அவை என்னவென்று பார்ப்போம்.

யதார்த்தம் (Reality)

பதிவுசெய்தல் (Record)

அறிக்கை கொடுத்தல் (Report)

மீட்டெடுத்தல் (Recovery) ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு அதன்பின், 

தீர்மானம் (Resolution)

வலுவூட்டப்பட்ட தீர்மானம் (Reinforced Resolution)

மறுமூலதனமும் நிதி பரிணாமும் (Recapitalization and Fiscal Dimension)

மீட்டமைத்தல் (Reset)

சீர்திருத்தம் (Reform)

ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டுமென்கிறார். 

வங்கிகளுக்குப் பூதாகரமான பிரச்சனையாக இருக்கும் வராக்கடனையும் அதனால் பொருளாதாரத்திலும், நிதி ஸ்திரத்தன்மையிலும் ஏற்படும் விளைவுகளையும் அதை சரி செய்வதற்கான வழி முறைகளையும் குறிப்பிட்டிருக்கிறார். இவையெல்லாம் ஏற்கனவே கேட்ட மாதிரி, படித்தமாதிரி இருக்கிறதென்றால் அதற்கெல்லாம் இது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்களான ஒய்.வி. ரெட்டியும், ரகுராமும் அவர்களுடைய உரைகளையும், கட்டுரைகளையும் தொகுத்து ஏற்கனவே புத்தகங்களாக கொண்டு வந்திருப்பது காரணமாக இருக்கலாம். 

பட்டேலும் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த போது பல கூட்டங்களில் ஆற்றிய உரைகளும், அதற்குப் பிறகு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பலதரப்பினரின் மத்தியில் பேசிய பேச்சுகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இதில் வராக்கடன் பிரச்சனைகான காரணங்களை ஆராய்ந்து அரசும், கட்டுப்பாட்டாளாராக இருக்கும் ரிசர்வ் வங்கியும் என்ன செய்ய வேண்டுமென தனது ஆலோசனைகளை முன் வைத்திருக்கிறார். இது சம்பந்தமாக இவர் பதவியிலிருக்கும்போது பரிந்துரைத்த சில கருத்துகளை அரசு ஏற்றுக்கொள்ளாததாலும்,  அரசுத் தரப்பு `யோசனை’களை இவர் ஏற்றுக் கொள்ளாததாலும் ஏற்பட்ட முரண்பாட்டால் இவர் அந்தப் பதவியிலிருந்து விலகினார். 

வாராக்கடன் பிரச்சனை மற்றும் வங்கிகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கு அவர் பாரபட்சம் இல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் பொறுப்பாளிகளாக மாற்றியுள்ளார். தேவைக்கு அதிகமாக கடன் கொடுத்த நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளை அரசு தட்டிக் கேட்காதது, பிரச்சனையை மிகவும் தாமதமாக உணர்ந்து அதை கையிலெடுத்த கட்டுப்பாட்டளர்கள் என அனைவரையும் இந்த சீரழிவுக்குப் பொறுப்பாக்கியிருக்கிறார்.  

மூன்று C என அறியப்படும் CBI, CVC and CAG ஆகிய அமைப்புகள் மீது வங்கியாளர்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள் என்கிற விஷயம் பலூன் போல ஊதி பெரிதாக்கப்பட்டது என இவர் கூறுகிறார்.  ஒரு வருடத்துக்கு முன்பு இவர் ஆற்றிய உரையில் 1) வங்கி அமைப்பில் கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் ஆதிக்கம் செலுத்துவது 2) சுயாதீனமான ஒழுங்குமுறை 3) நிதி விவேகத்தை அரசாங்கம் கடைபிடிப்பது ஆகியவை இயலாத காரியங்கள் எனக் குறிப்பிட்டார். எனவே, அரசானது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடன் ஓட்டத்தை (credit flow) வழிநடத்த விரும்பினாலும், நிதி பற்றாக்குறை இலக்கைப் பற்றியிருக்க வேண்டுமென்றாலும் (வங்கிகளுக்கு மறுமூலதனம் செய்யாமல்) கட்டுப்பாட்டாளர்கள் நியமங்களை (norms) தளர்த்திக் கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டாளர் தளர்வு எதுவும் செய்யாமல் பிடிவாதமாக இருந்தால் அரசு கடன் கொடுப்பது வாயிலாக, வங்கிகளுக்கு மறுமூலதனம் செய்யும் கொள்கையில் தலையிடுவது அவசியமாகும். அப்படி நேரிடும்போது அது நிதி விவேகத்துக்கு எதிராக அமையும். 

சுயாதீன ஒழுங்குமுறையும் பலத்த அடி வாங்கும் என நூலாசிரியர் நினைப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஏனெனில், அரசாங்கத்தின் நோக்கங்கள் பெரும்பாலும் வேறுபட்டிருப்பதோடு காலப்போக்கில் விதிமுறைகளில் தளர்வு ஏற்பட்டிருக்கிறது, இதனால் நெருக்கமான முதலாளிகள் (crony capitalists) மீதான அழுத்தம் குறைகிறது. உதாரணமாக, 2018 ஆம் ஆண்டு வங்கிசாரா நிதி நிறுவனங்கள், குறு சிறு நடுத்தர வணிகர்கள் மீதான ’சொத்து தர பரிசீலனை’ அமைதியாக ஆரம்பிக்கப்பட்டாலும் ஏதோ சில காரணங்களினால் `ஒத்திப்போடப்பட்டது’.

புதிய திவால் சட்டத்தைப் (ஐபிசி) பொருத்தவரையில் கூட அரசானது இன்னும் தீவிரமாக பின்பற்றியிருக்க வேண்டும். வராக்கடன் சம்பந்தமான மத்திய வங்கியின் சட்டகத்தை இப்போது இருக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகம் நீர்த்துப் போகச் செய்திருப்பது குறித்து தனது அதிருப்தியை இந்நூலில் அவர் பதிவு செய்திருக்கிறார். 

இது குறித்து அவர், `2019 ஆம் ஆண்டு, 2020 ஆண்டின் முற்பகுதியில் அரசும் மற்ற பங்காளார்களு,ம் (stakeholders) எடுத்த முடிவானது நீண்டகாலமாக தொடரப்பட்டு வந்த சில வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேக்கநிலையிலிருப்பதற்கான வாய்ப்பை அதிகரித்திருக்கின்றது. அரசாங்கம் மற்றும் அதிகாரப்பூர்வமான நிறுவனங்களை, குறைந்தபட்சம் சில வங்கிகளை அவ்வப்போது பிணையிலெடுப்பது தொடரும்’ எனவும் குறிப்பிட்டிருக்கிறார். 

பொருளாதாரம் மந்தமாக இருக்கும் இந்த கோவிட்-19 காலகட்டத்தில் தேவையை ஊக்குவிக்க அரசானது தொடர்ந்து வங்கிகளையே அதிகமாக சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் ஒழுங்குமுறை முன்னுரிமை மீண்டும் வந்திருக்கும் நிலையில் இந்த நிதியாண்டில் வராக்கடனும் சுமார் 50 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. 

”எப்போது நிரந்தரமாக இருக்கும் கடனாளிகள், எந்தவித முயற்சியும் எடுக்காத கடனாளிகள் மீது விழிப்புடன் இருக்க வேண்டும்; இல்லையெனில், நட்பு முதலாளித்துவத்துவத்தின் (crony capitalism) மீது அடைந்திருக்கும் சிறிய வெற்றிக்கூட குறைந்த காலமே நீடிக்கும் என்பதோடு இதுவரையில் அடைந்திருக்கும் வரையறுக்கப்பட்ட முன்னேற்றம் கூட தவறான விடியலாக மாறிவிடும்” என எழுதியிருக்கிறார். 

அரசின் காதுகளுக்கு இது கேட்குமா? கேட்குமென நம்பலாம். 

புத்தகத்தின் பெயர்: ஓவர்டிராஃப்ட் – சேவிங் தி இண்டியன் சேவர்

ஆசிரியர்: உர்ஜித் பட்டேல்

பதிப்பகம்: ஹார்ப்பர் இண்டியா

விலை ரூ 599

Spread the lovely business news