காரைக்குடியில் ‘தரமான, சுவையான உணவகம் என்றால் நினைவுக்கு வருவது ‘காரைக்குடி அன்னலெக்ஷ்மி’ தான். ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை உணவு வகைகள் காலத்துக்கேற்ப மாறியதே தவிர, சுவை, தரம், தூய்மை எதுவுமே மாறாமல் 20 ஆண்டுகளாக நிர்வகிக்கும் அந்தப் பெருமைக்குரியவர் காரைக்குடியைச் சேர்ந்த நா. நாராயணன்.
வணிகவியல் முடித்து, காரைக்குடி, கோவிலூர் மடத்தின் கௌரவ தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இருந்தவர் நாராயணன்.
தணிக்கை துறையில் இருந்த அவரை தளிகை துறைக்கு ஈர்த்தது எது? எனக் கேட்டோம்.
‘‘கோவிலூர் மடத்தின் அப்போதைய மடாதிபதி நாச்சியப்ப சுவாமிகள், கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி மடத்தில் நிறுவியிருந்த ‘லார்ஜ் வால்யூம் கிச்சன்’ போல கோவிலூர் மடத்திலும் துவங்க வேண்டும் என விரும்பினார். அப்போது தொடங்கிய கிச்சன்தான் இப்போதைய காரைக்குடி அன்னலெக்ஷ்மிக்கான முன்மாதிரி.
‘லார்ஜ் வால்யூம் கிச்சன்’ போல சுத்தமான சுகாதாரமான சூழ்நிலையில் அதிக அளவிலான சமையல் செய்யக்கூடிய ‘ஹை எண்ட் கிச்சன்’ 2000 ஆண்டில் காரைக்குடியில் முதலில் தொடங்கினோம். புதுப்புது தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி கருவிகளை அறிமுகப்படுத்தினோம். பின்னர் சென்னையில் ரெஸ்டாரண்ட் வைக்காமல் விழாக்கள், விசேஷங்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆர்டர் எடுத்து கேட்டரிங் சப்ளை செய்ய ஆரம்பித்தோம்!’’ என்கிறார் நாராயணன்.
‘‘எத்தகைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தினீர்கள்?’’
சமையலுக்கு ‘ஜாக்கெட் கெட்டில்’ என்ற முறையைக் கொண்டுவந்தோம். இப்போது ‘எலெக்ட்ரிக் கெட்டில்’ பயன்படுத்த இருக்கிறோம். காய்களை நறுக்க, கீரை, பீன்ஸ் போன்றவற்றை பொடியாக நறுக்கவும், வாழைத்தண்டு, பூண்டு, வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும் எங்களிடம் இயந்திரங்கள் உள்ளன. பல கருவிகள் சீனாவிலிருந்து வந்தவை.
மேலும் காய்களை கழுவுவதற்கு ‘ஓஸோனேஷன்’ (Ozonation) என்னும் முறையைப் பயன்படுத்துகிறோம். இதனால் காய்களில் படிந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்து கழுவப்பட்டு காய்கள் சுத்தமாகிறது. காய்களில் ‘கொரோனா’ போன்ற கொடிய வைரஸ் இருந்தால் கூட இந்த ‘ஓஸோனேஷன்’ முறையில் அழிந்துவிடும்.’’ என்றார்.
‘‘பொதுவாக எங்கள் கிச்சனில் ‘மாஸ்டர்’ என்ற கான்செப்டே கிடையாது. காரணம் சமையலுக்குப் பயன்டும் எல்லாப் பொருட்களையும் எடை போட்டு சமைக்க ஆரம்பிப்போம். சமையல் முடிந்து வந்த ‘அவுட்புட்’ டையும் எடை பார்ப்போம். மேலும் எங்களின் தனித்துவம் என்னவென்றால் இங்கே சமையல் பற்றி எதுவுமே தெரியாதவர்களைத்தான் வேலைக்குச் சேர்க்கிறோம். பின்னர் பொருட்களை எடை போட்டு சமைக்கும் முறையில் பயிற்சி கொடுக்கிறோம். இங்கே வேலை செய்யும் எல்லோரும் எல்லா உணவுகளையும் சமைக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘தினம் ஒரு உணவு சமைத்தல்’ என்ற கான்செப்டில் சமைக்க சொல்வோம். எங்கள் கிச்சனில் சமைத்த உணவை இறக்கி சிரமப்படாமல் கெட்டிலை சாய்த்தாலே போதும்’’ என்று ஆச்சரியங்களை அடுக்கினார்.
உணவுகளை ருசி பார்ப்பதும் வித்தியாசமான முறைதான். வெறும் சாம்பார் மட்டும் வாயில் போட்டு பார்த்தால் போதாது. இட்லியுடன் சாம்பார், சட்னி போட்டு சாப்பிட்டு சுவை பார்க்க வேண்டும். இது போலவே அனைத்து உணவுகளையும் சுவைக்க வேண்டும். இதற்காகவே மூன்று ஊழியர்கள் இருக்கிறார்கள்.’’
‘‘எங்களுடைய அடுத்த கட்ட வளர்ச்சி, முழுக்க முழுக்க புகை வராத ‘தானியங்கி மின்சார சமையலறை’ வைப்பதுதான்”.
இவருடைய மனைவி லெக்ஷ்மி காரைக்குடி ரெஸ்ட்டாரன்ட்டை திறம்பட நிர்வகிக்க, சென்னை கிச்சனை பொது மேலாளர் பத்மா நிர்வகிக்கிறார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் 15 ஆண்டுகளாக வேறு கேட்டரிங் சர்வீஸுக்கு மாறாமல் இருப்பது ஒன்றே காரைக்குடி அன்னலெக்ஷ்மியின் அறுசுவைக்கும் தரத்துக்குமான மிகச் சிறந்த சான்று.
‘வெஹிகிள் ட்ராக்கிங்’ முறையை நாங்கள் 7 வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தி விட்டோம். எனவே குறிப்பிட்ட நேரத்தில் உணவு டெலிவரி செய்யமுடிகிறது.
‘‘போதும்’ என திருப்தி அடைந்துவிட்டால், முன்னேற்றம் அத்தோடு நின்றுவிடும். ‘அடுத்து என்ன’ என்ற தேடல் மனதில் எப்போதும் இருக்க வேண்டும். அப்போதுதான் தொழிலும் விரிவடையும்!’’ என்று தன் தொழில் ரகசியம் கூறிப் புன்னகைக்கிறார் நாராயணன்.
அறுபது ஆண்டுகளானாலும் காரைக்குடி அன்னலெக்ஷ்மியின் சுவையும் தரமும் மாறாது என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி வேண்டுமா என்ன!