100% சுயதொழில்
100% வீட்டுத்தயாரிப்பு
100% மகளிர் மேம்பாடு
100% கிராமப்புற வளர்ச்சி
100% விவசாய உற்பத்தி பொருட்கள் பாதுகாப்பு
தற்போதைய காலகட்டத்தில் பொருட்கள் உபயோகப்பாளர்களுக்கு கிடைப்பதில் பல்வேறு மாற்றங்களை காண முடிகின்றது. ஒரு சமயத்தில் தேவைக்கும் அதிகமாக பொருட்கள் கிடைக்கும் சூழ்நிலை. மற்றொரு சமயத்தில் தட்டுப்பாடான சூழ்நிலை. இந்த மாதிரி வேறுபட்ட சூழ்நிலைகளுக்கு பல்வேறு காரணிகள் மூலமாக இருக்கின்றது.
பொருட்கள் அதிகம் உற்பத்தியாகும் சமயமோ அல்லது பொருட்கள் வீணாகும் சமயத்தில் அதை பாதுகாத்து பிற காலகட்டத்தில் உபயோகப்படுத்துவது என்பது எல்லா பொருட்களுக்கும் பொதுவான கருத்தாக அமைவது மிகவும் கடினம். அதிலும் முக்கியமாக விவசாய உற்பத்தி பொருட்களை (காய்கறிகள், பழங்கள்) பாதுகாக்க பல்வேறு குளிர்பதன வசதிகள் தேவையாக உள்ளது. இவை எல்லாம் உற்பத்தியாளர் அனைவருக்கும், முக்கியமாக கிராமப்புற விவசாயிகளுக்கு, கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
உதாரணத்திற்கு, விவசாயப்பொருளின் விலை எந்த மாதிரியான வேறுபாடுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை என்பதை ஒரு வரைபடத்தின் மூலம் இங்கு குறிப்பிடப்படுகின்றது.
உற்பத்தி நிலைக்கு அருகாமையில் இருக்கும் இடங்களில் உள்ள விலைக்கும் தொலைவில் நிர்ணயம் செய்யப்படும் விலைக்கும் வித்தியாசம் உண்டு. பொருட்களை கொண்டு செல்ல போக்குவரத்து சார்ந்த செலவீடுகள் பொருட்களின் விலையை அதிகரிக்கின்றது. மேலும் விவசாயப்பொருட்களை பக்குவமாக உபயோகிப்பாளர்களைச் சென்றடைவது மிகவும் முக்கியமானது. இல்லாவிடில் காய்கறிகள், பழவகைகளின் சேத விகிதம் அதிகரிக்கும். இதனால் விவசாய உற்பத்தியாளர்கள் பலவிதமான இன்னல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
தேவைக்கு அதிகமான உற்பத்தியும் அதிக தட்டுப்பாடும் உற்பத்தியாளர்கள்-உபயோகப்பாளர்களுக்கு இடையேயான தொடர்பில் பாதிப்படையச் செய்கின்றது. இதை ஒழுங்குபடுத்துதல் மிகவும் முக்கியமானது. இதற்கு அந்தந்த சூழ்நிலையில் உடனே தீர்வு காண்பது கடினமானது. உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தகுந்த முறையில் பதப்படுத்துவது சூழ்நிலை சார்ந்த உபயோகத்திறனை மேம்படுத்துகின்றது. தட்டுப்பாடு என்ற நிலை வரும் சமயம் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிசெய்கின்றது.
இவற்றை மிகவும் எளிதாக வீட்டிலிருந்தே சுயதொழிலாக செய்யலாமே. கிராமப்புறத்தில் இருக்கும் மகளிர் மேம்பாட்டிற்கு இது ஒரு வாயில். இதன் வழியாக உற்பத்தி செய்யப்படும் தரமான பொருட்கள் எவ்வாறாக உபயோகிப்பாளர்களைச் சென்றடையச் செய்வதென்பதை அடுத்து வரும் தொகுப்பில் காணலாம்.