நீங்க ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்க போறீங்களா?… அப்படின்னா பல ஸ்டார்ட் அப் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு புதுமையாக தோன்றும். அதை தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அவற்றை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகரன். இவர் ஒரு மிகச்சிறந்த மொழி வல்லுநர், கைதேர்ந்த ஓவியர். இந்தத் தொடர் ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கப் போகும் ஒவ்வொருவருக்கும் இந்த தொடர் ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் இந்த தொடர் கட்டுரைக்குள் செல்வோம்.
பிளவு (Chasm)
நீங்கள் தயாரித்த பொருளை பரவலாக நிறைய பேர் வாங்கினால் தான் உங்களது கம்பெனியின் வளர்ச்சி சாத்தியப்படும்.
பல “ஸ்டார்ட் அப்” கம்பெனிகள் பொருட்களை விற்கும் போது ஒரு பிரிவு வாடிக்கையாளர்கள் மீது மட்டும் கவனம் செலுத்தி அவர்களை கையகப்படுத்தி வரும் வேளையில் மற்ற பிரதான சந்தையை கோட்டை விட்டு விடுகிறார்கள். மேற்கூறிய கவனம் செலுத்தும் சந்தைக்கும், கவனம் செலுத்த கோட்டை விட்ட சந்தைக்கும் இருக்கும் இடைவெளி தான் Chasm (காஸம்) எனப்படுகிறது. இதை தமிழில் கூறும் போது பிளவு அல்லது எட்டிப் பிடிக்க முடியாத வேறுபாடு என்று கூறலாம்.
மேம்படுத்தப்பட்ட தேடு பொறி உபயோகம் (SEO – Search Engine Optimization)
ஒரு ஸ்டார்ட் அப் வளர்வதற்கு கூகுள், யாகூ போன்ற இணையதளங்கள் மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றன. இவைகள் இல்லாமல் இருந்திருந்தால் வாடிக்கையாளர்களை பிடிக்க ஸ்டார்ட் அப் கம்பெனிகள் விளம்பரங்களுக்கு அதிகம் செலவிட வேண்டியிருந்திருக்கும்.
சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன் என்பது ஒரு வகை யுக்தி. அதன் மூலம் வலைதளத்தில் அதிகம் தேடப்படும் கம்பெனியாக உங்கள் ஸ்டார்ட் அப் வரும் போது உங்கள் கம்பெனியின் அந்தஸ்து உயர்ந்து சர்ச் இஞ்சின் ரேங்கிங் என்ற தர வரிசையில் முக்கிய இடம் பெற முடியும்.
இலக்கு சந்தை (Target Market)
ஒரே மாதிரியான தேவைகளும், நோக்கங்களும் கொண்ட ஒரு பிரிவு மக்கள்தான் உங்களுடைய வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் அவர்கள்தான் உங்களுடைய இலக்கு சந்தை. உங்களுடைய வாடிக்கையாளர்களின் பாலினம், வயது, வருமானம் போன்ற விபரங்கள் அடங்கிய “இன்போ கிராபிக்ஸ்” (Info Graphics) என்ற புள்ளிவிபர அட்டவணை மற்றும் அவர்களுடைய விருப்பு, வெறுப்பு, ரசனை போன்ற விபரங்கள் அடங்கிய “சைக்கோகிராபிக்ஸ்” (Psychographics) என்கிற உளவியல் அட்டவணை போன்றவைகள் மூலம் வரையறுக்க முடியும்.
டிராக்ஷன் (Traction)
டிராக்ஷன் என்பது ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனியின் முக்கிய அளவீடுகளை மதிப்பிடுவது ஆகும்.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கம்பெனியின் வளர்ச்சி வேகம், அதற்கு நீங்கள் கையாளும் யுக்திகள், இதர புள்ளி விபரங்கள், ஆதாரங்கள் அடங்கிய காட்சி விளக்க அட்டவணையே “டிராக்ஷன்” எனப்படும்.
முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் டிராக்ஷனை சீர்தூக்கி பார்த்து முதலீடு செய்வதற்குரிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா என்பதை ஆராய்வார்கள்.
நீங்கள் ஒரு “ஸ்டார்ட் அப்” நிறுவனர் என்ற வகையில் உங்கள் முதல் தயாரிப்பை கட்டமைப்பதற்கு முன்பாகவே உங்களுடைய டிராக்ஷனை கட்டமைத்துக் கொள்ள முடியும்.
ராபின் ஹூட் (Robin Hood) மற்றும் பப்ஃபர் (Buffer) போன்ற கம்பெனிகள் தங்களுடைய தயாரிப்புகளின் முதல் பதிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே அவர்களுடைய பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் பட்டியலை தயாரித்து விடுகின்றனர்.
இன்பவுண்ட் மார்க்கெட்டிங் என்கிற உள்நோக்கு சந்தைப்படுத்தல் யுக்தியின் மூலம் ஸ்டார்ட் அப்-கள் தங்களின் டிராக்ஷனை கட்டமைத்து கொள்ள முடியும்.
வரும் இதழ்களிலும் ஸ்டார்ட் அப் பிசினஸில் உபயோகப்படுத்தப்படும் இன்னும் பல சொற்களுடன் உங்களை சந்திப்போம்.
(தொடரும்)