சென்னை – ஆழ்வார்ப்பேட்டை ‘மில்லட் மேஜிக் மீல்’ உணவகத்தில் ‘மில்லட்’ வகைகளில் பல சுவையான ‘மேஜிக்’ ரெசிபிகளைப் பார்க்கலாம்!
ஸ்விக்கி, ஜொமேட்டோ, ஊபர் ஈட்ஸ் போன்ற ஹோம் டெலிவரி ஆப்களில் இது பிரபலமாகவும் முன்னணியிலும் இருக்க காரணம் முழுக்க முழுக்க சிறுதானியங்களுக்கான உணவகம் என்பதுதான். இங்கே இட்லி, தோசை, இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற சிற்றுண்டிகளில் தொடங்கி, பீட்ஸா போன்ற அயல்நாட்டு உணவு வகைகள் வரை அனைத்து உணவுகளும் சிறுதானியங்களில் செய்யப்படுவது மிகவும் ஆச்சரியம். அனைத்துமே மிகச் சுவையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உணவகத்தை நடத்தி வரும் ஆதி ஈஸ்வரி & சுரேஷ்குமார் தம்பதியிடம் பேசினேன்.
ஆதி ஈஸ்வரி ‘‘எங்க சொந்த ஊர் திருநெல்வேலி. அம்மா ரொம்ப ருசியா சமைப்பாங்க. அதே பக்குவம் எனக்கும் இயல்பாகவே அமைஞ்சிருந்தது. சென்னைக்கு வர்றதுக்கு முன்னே பெங்களூரில் இருந்தபோது, எங்க அபார்ட்மென்ட்வாசிகளுக்கு வீக் எண்டில் ஆர்டர் எடுத்து, நம்ம ஊர் இட்லி, தோசை, சாம்பார், சட்னி செய்து கொடுப்பேன். என் சமையலை எல்லோரும் பாராட்டினாங்க. அப்போதே எனக்கு கேட்டரிங் பிசினஸ் செய்ய ஒரு எண்ணம். 2014 ல் ஷீர்டி பாபாவிடம் வேண்டிக்கிட்ட ஒரு பிரார்த்தனைக்காக 48 நாட்கள் அரிசி உணவுகள் சாப்பிடாமல் இருந்தேன். அந்தச் சமயத்தில் அரிசி உணவுகளுக்கு மாற்றாக சிறுதானியங்களில் இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், கஞ்சி போன்ற எல்லா உணவுகளையும் செய்து சாப்பிட்டேன். சுவையாகவும் இருந்தது.. உடல் ஆரோக்கியமாகவும் இருந்தது. நாங்க சென்னைக்கு வந்த பின்னர், அந்த ரெசிபிகளை மற்றவர்களுக்கும் சொல்லித் தரலாமேன்னு ‘சிறுதானிய சமையல்’ வகுப்பு எடுத்தேன். வெளிநாட்டினர், டாக்டர்கள், வக்கீல்கள் கூட வகுப்புக்கு வந்தாங்க. அப்போ கூட சிறுதானிய உணவகம் ஆரம்பிப்பேன்னு நினைக்கல.
ஆனால் என்கிட்ட கத்துக்கிட்ட மாணவிகள் எல்லாம், ‘நாங்க என்னதான் செய்து பார்த்தாலும் நீங்க செய்ற டேஸ்ட் வரல மேடம்’னு சொன்னதும், ‘சரி நாமே செய்யலாம்’னு சிறிய அளவில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து, அங்கே உணவுகளைத் தயாரிச்சு, ‘டோர் டெலிவரி’ பண்ண ஆரம்பிச்சோம். ஓரளவு ஆர்டர் வந்தது. வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு மாதிரியான சிறுதானியங்களில்தான் முழுக்க முழுக்க டிபன், சாப்பாடு எல்லாம். அப்போ ஆன்லைன் சேல்ஸ் எல்லாம் இல்லை. போனில் ஆர்டர் எடுத்து, நானே வண்டியில் போய் கொடுத்துட்டு வருவேன். அந்தச் சமயத்தில் லோகல் பேப்பரில் எங்களைப் பத்தி ஆர்டிகிள் ஒண்ணு வந்தது. அதுக்குப் பிறகு ஆர்டர் நிறைய வர ஆரம்பிச்சுது. நான் சமைப்பேன். என் கணவர் சப்ளை பண்ணுவார். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் டெவலப் ஆனதும் ரெண்டு பசங்களை டெலிவரிக்காக வேலைக்கு சேர்த்தோம். அந்தக் குட்டி கிச்சனில்தான் சுமார் மூணு, நாலு வருஷம் எங்க பிசினஸ் ஓடுச்சு.
ஒரு கட்டத்தில், ‘ஸ்விக்கி’யில் வாடிக்கையாளர்களிடையே எங்களுக்கு 4.7 நட்சத்திர அந்தஸ்து வந்தது. ஒரு நாளைக்கு ஏழெட்டு மீல்ஸ் என்றிருந்தது, 120 மீல்ஸாக உயர்ந்தது. எங்க வாடிக்கையாளர்கள் எல்லோரும் வந்து உட்கார்ந்து சாப்பிடுவது போல ‘ஈட் அவுட்’ தொடங்கச் சொல்லிக் கேக்க ஆரம்பிச்சாங்க. சென்னை அண்ணா நகரில்தான் முதலில் ரெஸ்ட்டரன்ட் தொடங்கினோம். எக்ஸ்க்ளூஸிவாக டின்னருக்கு மட்டுமான உணவகம் அது. சீஸ் பால்ஸில் தொடங்கி, கம்பு தோசை வரை எல்லா அயிட்டன்களும் சூப்பரா போச்சு! 2019ல் ஆழ்வார்ப்பேட்டை உணவகம் திறந்தோம். முதலில் ஹோம் டெலிவரி மட்டும்தான் வைத்திருந்தோம். வாடிக்கையாளர்கள் ரொம்பக் கேட்டுக்கொண்டதன் பேரில் இங்கேயே சாப்பிடற மாதிரி உணவகமாக மாத்தினோம். காலை முதல் இரவு வரை செயல்படும் முழு நேரம் உணவகமாக இது செயல்படுது..’’ என்று தங்கள் ‘மில்லட் மேஜிக்’கின் முழு வரலாறையும் கோர்வையாகச் சொன்னார் ஆதி ஈஸ்வரி.
இங்கே கலவை சாதங்கள், புலாவ், பிரியாணி வகைகள், பரோட்டா, புல்கா, சாலட் மற்றும் சூப் வகைகள் எல்லாமே சிறுதானியங்களில்தான். பீட்ஸா கூட சிறுதானியத்தில் தயாராகிறது. இவை தவிர சிறுதானியங்கள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்காக குக்கீஸ் (குளூட்டன் இல்லாதவை) மற்றும் முறுக்கு, ரிப்பன் பகோடா, மில்லட் போர்பன் பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளையும் சிறுதானியங்களிலேயே செய்து விற்பனை செய்கின்றனர். பானகம், வெள்ளரி மோர், நெல்லிக்காய் சேர்த்த மாதுளை ஜூஸ், லஸ்ஸி போன்றவை இவர்களின் ஸ்பெஷல் அயிட்டங்கள். எதிலுமே வெள்ளை சர்க்கரை மற்றும் பிரிசர்வேடிவ் சேர்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சை சாறு, தேன், கருப்பு உப்பு, வெண்ணெய் போன்ற இயற்கை பொருட்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றன.
‘‘ஒரு வாடிக்கையாளரை முதல் தடவை இங்கே வர வைக்கிறதுதான் எங்களுக்கு சவாலான பணி. ஒரு முறை வந்துட்டா, உணவின் சுவை பிடிச்சுப் போய் அப்புறம் அவங்களே அடுத்த முறை வரும்போது நண்பர்கள், உறவினர்கள்னு குடும்பமாக வர்றது சந்தோஷமாக இருக்கு.. தினமும் மாலையில் ஒவ்வொரு நாளு ஒரு பயறு சுண்டல் உண்டு. அது தவிர, மோதகம், வரகரிசி கொழுக்கட்டை, கறிவேப்பிலை மினி இட்லி, சனிக்கிழமைகளில் இலை கொழுக்கட்டை என்று ஸ்பெஷல் மெனு வச்சிருக்கோம். தினமும் வெரைட்டியாக நாங்க செய்யும் காய்கறி சட்னியும் (ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காய்), ஞாயிற்றுக்கிழமைகளில் பீட்ரூட் வடையும் வாழைப்பூ டாப்பிங் செய்த அடையும் வாடிக்கையாளர்களின் ஆல் டைம் ஃபேவரைட்’’ என்று தங்கள் மெனுவை உற்சாகமாக விவரித்தார் சுரேஷ்குமார்.கிச்சன் மேற்பார்வை, ரெசிபிகளுக்கான அளவுகள், சமையல் போன்ற அனைத்தையும் ஆதி ஈஸ்வரி கவனித்துக்கொள்ள, உணவகத்தின் கணக்கு வழக்குகள் மற்றும் ஆன்லைன் விற்பனை, ஹோம் டெலிவரி, பிசினஸ் புரமோஷன் போன்ற பணிகளை சுரேஷ்குமார் பார்த்துக்கொள்கிறார்.
‘‘ஹோட்டல் தொழிலில் எப்போதுமே நல்ல ஆட்கள் கிடைக்கிறதுதான் பிரச்னை. எப்போதும் நிலையான ஒரே சுவையைக் கொடுக்கணும்னா அதுக்கு நல்ல ஆள் அமையணும். ஆனால் கடவுள் அருளால் இப்போ சுமார் 20 பேருக்கு மேல வேலை செய்றாங்க. எனக்கு சிறுதானிய சமையல் நல்லா தெரிஞ்சதால், ஆள் இல்லேன்னாலும் நானே சமைச்சிடுவேன். எதுக்காகவும் எங்க உணவுகளின் சுவையில் சமரசம் செய்துக்கிறதில்லை. உண்மையான, சீரான கடும் உழைப்பும், உறுதியும் இருந்தால் எந்தப் பிரச்னையையும் தாண்டி ஒரு தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்’’ என்று கட்டைவிரல் உயர்த்தி வெற்றிச்சின்னம் காட்டுகிறார் ஆதி ஈஸ்வரி.
இந்த ஊரடங்கு நேரத்தில், ஹோம் டெலிவரி மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் சில உணவு வகைகள் மட்டுமே தயாரிக்கிறார்கள். ஆனால்
தொழிலில் அடுத்தகட்ட முன்னேற்றமாக, சிறுதானிய ஈர மாவு, சமையலுக்கான பொடிகள் மற்றும் உடனடி உணவு வகைகள் ஆகியவற்றைத் தயாரித்து விற்கும் திட்டமும் இவர்களிடம் உள்ளது. இந்த சிறுதானிய சமையல்ராணிக்குக் காத்திருக்கிறது மிகப் பெரியதொரு எதிர்காலம்!
தொடர்புக்கு : 97911 67663