அமேசானின் வெற்றி என்பது அமேசான் கடை வாயிலாக பொருட்களை விற்கும் ஆயிரக்கணக்கான சிறிய, நடுத்தர அளவிலான தொழில்களைச் சார்ந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது முக்கியமானதாகும். 1999 ஆம் ஆண்டு அதற்கு முன் இல்லாத பழக்கமாக, எங்கள் பொருட்களுடன் மூன்றாம் தரப்பைச் சேர்ந்தவர்களின் பொருட்களையும் எங்கள் கடைகள் மூலமாக விற்குமாறு அழைப்பு விடுத்தோம். அமேசானுக்குள் இது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியதோடு நீண்ட, இழப்பு அதிகமாக இருக்கும் போரின் தோல்விக்கான ஆரம்பம் எனவும் கணிக்க ஆரம்பித்தனர். நாங்கள் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களை அழைக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. மிகவும் விலைமதிப்பற்ற `ரியல் எஸ்டேட்டை’ நாங்கள் எங்களுக்கு மட்டுமே வைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், காலப்போக்கில் இது வாடிக்கையாளர்களுக்கான தெரிவை அதிகரிக்குமென்றும், அதிக திருப்தியடையும் வாடிக்கையாளர்கள் அமேசானுக்கானவர்களாகவும், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களுக்காகவும் இருப்பார்கள் என நினைத்தோம். அது போலவே தான் நடந்தது. அவர்களைச் சேர்த்த முதலாம் ஆண்டிலேயே கொள்ளளவு விற்பனையில் (unit sales) இதன் பங்கு சுமார் 5 சதவிகிதமாக இருந்தது. இதிலிருந்து வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் சிறந்தப் பொருட்களை, பல விற்பனையாளர்களின் விலையோடு ஒப்பிட்டு வாங்கக்கூடிய வசதியை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிய வந்தது. இன்றைக்கு இந்த சிறிய, நடுத்தர அளவிலான மூன்றாம் தரப்பு தொழில்கள் அமேசான் கடைகளின் பொருட்கள் தெரிவில் முக்கிய பங்கு வகிப்பதோடு அமேசான் பொருட்களின் விற்பனையில் சுமார் 60 சதவிகிதம் இதன் பங்காக இருக்கிறது. அதோடு அமேசான் பொருட்களின் விற்பனையை விட இவர்களுடைய பொருட்களின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. இவர்களின் விற்பனை வளர்ச்சியடைந்து வருவதோடு அமேசான் வாடிக்கையாளர்களுக்கும் இது சிறப்பான ஒன்றாக அமைந்தது. இதனால் ஒட்டு மொத்த விற்பனையும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் அமேசான் கடைகளில் சுமார் 1.7 மில்லியன் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் அதனுடைய பொருட்களை விற்று வருகின்றன. 2019 ஆம் ஆண்டு உலகளவில் 200,000 க்கும் அதிமான தொழில்முனைவோர்கள் ஒவ்வொருவரின் விற்பனையும் 100,000 டாலருக்கும் அதிகமாக இருந்தது. அதற்கும் மேலாக, அமேசானில் விற்பனை செய்து வரும் இந்த மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் மூலம் உலகளவில் சுமார் 2.2 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என நாங்கள் கணக்கிட்டிருக்கிறோம்.
இந்தமாதிரியான விற்பனையாளர்களில் ஒருவர் ஷெர்ரி யுக்கெல். அவர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்கான தனது வேலையை மாற்றிக் கொண்டார். பொழுதுபோக்காக நண்பர்கள் வீட்டு விருந்துகளின் போது பரிசளிக்கும் வகையில் சில கைவினைப் பொருட்களை செய்ய ஆரம்பித்தார். அதன் பின் அதை அமேசான் மூலம் விற்க ஆரம்பித்தார். இன்றைக்கு அவரது நிறுவனத்தில் 80 பேர் வேலை பார்க்கிறார்கள். அவருக்கு வாடிக்கையாளர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். இது போல இன்னொருவர் கிறிஸ்டின் க்ரோக்.
இவையெல்லாம் எவ்வளவு சமீபத்தில் நடந்தது என நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் eBay போல பெரிய அளவில் எங்களது சந்தைத் தளத்தை ஆரம்பிக்கவில்லை. விற்பனையாளர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களுக்குத் தேவையான சிறந்த கருவிகளை வழங்கும்பட்சத்தில் eBayயையும் முந்தலாம் என்பது தெரியவந்தது. அந்தக் கருவிகளில் ஒன்று `Fulfillment’ ஆகும். அதாவது மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் அவர்களது பொருட்களை எங்களுடைய Fulfillment Centre களுக்கு அனுப்ப வேண்டும் அதற்குப் பிறகான லாஜிஸ்டிக், வாடிக்கையாளர் சேவை, பொருளைத் திரும்பப் பெறுதல் ஆகிய அனைத்தையும் நாங்கள் கையாள்கிறோம். மிகவும் சவாலான அம்சங்கள் நிறைந்த விற்பனை அனுபவத்தை மிகவும் சிக்கனமாக செலவில் எளிமையாக்கி பல்லாயிரம் விற்பனையாளர்களின் தொழிலை அமேசான் மூலம் வளர்ச்சியடைய உதவியிருக்கிறோம். உலகெங்கும் பரவிவரும் சந்தைத்தளங்கள் நாங்களடைந்த வெற்றியை விளக்குவதற்கு உதவியாக இருக்கும். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட், இபே, ஈட்ஸி, டார்கெட் ஆகியவையும் அயல்நாட்டைச் சேர்ந்த ஆனால் உலகம் முழுவதும் விற்பனை செய்து வரும் அலிபாபா, ராக்குடென் ஆகியவையும் அடங்கும்.
எங்கள் மீது ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர் வைக்கும் நம்பிக்கை அமெரிக்காவில் கடந்த தசாப்தங்களில் மற்றெந்த நிறுவனங்களை விடவும் அதிகமான அளவுக்கு 42 மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான வேலைகளை அமேசான் உருவாக்க அனுமதித்திருக்கிறது. அமேசான் பணியாளர் ஒருவர் ஒரு மணி நேரத்துக்கு 15 டாலர் சம்பாதிக்கிறார். இது ஃபெடரல் அரசின் குறைந்த பட்ச ஊதியத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும் (குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டுமென்று நாங்கள் காங்கிரஸை கேட்டுக் கொண்டிருக்கிறோம்). எங்களுடைய 15 டாலர் சம்பளத்துக்கு பொருந்தி வருமாறு மற்ற பெரிய சில்லறை வணிக நிறுவனங்களுக்கு சவால் விட்டோம். இப்போது டார்கெட்டும் சென்றவாரத்தில் பெஸ்ட் பை-யும் இதைச் செய்திருக்கிறது. அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். இதற்காக நாங்கள் மற்ற நல அம்சங்கள் எதையும் குறைக்கவில்லை. எங்களுடைய முழுநேர மணிக் கணக்கின் அடிப்படையில் வேலை செய்யும் பணியாளர்கள் தலைமை அலுவலகத்தில் சம்பளம் வாங்கி பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்குள்ள காப்பீடு வசதிகள், 401(K) ஓய்வுத் திட்டம், பெற்றோர் விடுமுறை, 20 வார மகப்பேறு விடுமுறை என அனைத்தையும் பெற்று வருகிறார்கள். எங்களுக்கு போட்டியாக இருக்கும் சில்லறை வணிக நிறுவனங்களிடம் எங்களுடைய சம்பளத்தையும், நல அம்சங்களையும் `பெஞ்ச்மார்க்’காக எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆதாரம்: அமேசான் இணையதளத்தின் `DAY ONE’